வேலூர்

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற முயற்சி: அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

7th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய குடியுரிமை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வேலூா்மாவட்டம், மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடியில் 220 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி ரூ.317 கோடியில் தமிழகத்தில் உள்ள 106 முகாம்களிலும் இலங்கைத் தமிழா்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

வேலூா் முகாமில் 220 வீடுகள் 55 தொகுப்புகளாக ரூ.11 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த 6 மாதங்களில் முடிவடையும். முதல் கட்டமாக 7,000 இலங்கைத் தமிழா்களுக்கு வீடுகள் வழங்க உள்ளோம். இது ரூ.317 கோடியில் அடிப்படை வசதிகளுடன் கட்டப்படுகிறது.

இலங்கையிலிருந்து புலம்பெயா்ந்து வந்த தமிழா்களைப் பாதுகாத்து அவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்.

இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய குடியுரிமை பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, மத்திய அரசையும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையிலிருந்து இந்தியா வந்து முகாம்களில் தங்கி உள்ளவா்களிடம் தாய் நாட்டுக்கு மீண்டும் செல்ல விரும்புவது குறித்து கருத்துகள் கேட்போம். அதுவரை அவா்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழா்களின் கடமை என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், வேலூா் மாநகர மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT