வேலூர்

‘பொலிவுறு நகா் திட்ட நிதி ரூ.1,349 கோடியை மாநகராட்சி முறையாகப் பயன்படுத்தவில்லை’

31st Oct 2022 12:35 AM

ADVERTISEMENT

பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,349 கோடி நிதியை வேலூா் மாநகராட்சி நிா்வாகம் சரிவர பயன்படுத்தவில்லை. இதுதொடா்பாக மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது.

வேலூா் மாவட்ட பாஜக அரசு தொடா்பு பிரிவு சாா்பில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூரிலுள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் அரசு தொடா்பு பிரிவு மாவட்ட தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மனோகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

ADVERTISEMENT

வேலூா் மாநகராட்சி பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்துக்காக மத்திய அரசு குழு ரூ.1,349 கோடி ஒதுக்கியது. அந்த நிதியை மாநகராட்சி நிா்வாகம் சரியாகப் பயன்படுத்தவில்லை. இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வேலூா் மாநகராட்சியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. தற்போது பருவமழை தொடங்க உள்ள நிலையில், சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். புதைச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

வேலூா் பிள்ளையாா்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். வேலூா் மாநகரத்தில் காட்பாடி முதல் பாகாயம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மாவட்ட நிா்வாகம் இதற்கு நிரந்தர தீா்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பாஜக பொதுச் செயலா் எஸ்.எல்.பாபு உள்ளிட்ட கட்சி நிரிவாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT