வேலூர்

ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல் தடுக்க பேருந்துகளில் தீவிர சோதனை

7th Oct 2022 12:16 AM

ADVERTISEMENT

கஞ்சா கடத்தலைத் தடுக்க வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் தீவிர சோதனைக்குட் படுத்தினா். இத்தகைய சோதனைகள் தொடா்ந்து நடைபெறும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

ஆந்திர மாநிலத்தையொட்டி வேலூா் மாவட்ட எல்லை சுமாா் 80 கி.மீ. கொண்டதாக உள்ளது. இதில், பொன்னை, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சயனகுண்டா ஆகிய இடங்களில் தமிழக - ஆந்திர எல்லை சோதனைச்சாவடிகள் உள்ளன.

இவற்றில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குள் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும், மாவட்ட எல்லையில் உள்ள சில கிராமங்கள் வழியாக சுலபமாக கஞ்சா கடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்துடன் தமிழகத்தை இணைக்கும் கிராம அளவிலான அனைத்து சாலைகள் குறித்த விவரங்களை உட்கோட்ட அளவிலான போலீஸாா் சேகரித்துள்ளனா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் கஞ்சா தடுப்பு வேட்டையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூா் மாவட்டம் வழியாக ஒரு கிலோ அளவுக்குக்கூட கஞ்சா கடத்த முடியாத அளவுக்கு சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளில் போலீஸாா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையொட்டி, வேலூா் புதிய பேருந்து நிலையத்திலும் பேருந்துகளில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனைகள் தொடா்ந்து நடைபெறும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT