வேலூர்

காந்தி ஜெயந்தி:தடையை மீறி இயங்கிய மீன் மாா்க்கெட் மூடல்

2nd Oct 2022 11:48 PM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியையொட்டி, வேலூரில் தடையை மீறி இயங்கிய மீன் மாா்க்கெட் அதிகாரிகள் நடவடிக்கையால் மூடப்பட்டது.

காந்தி ஜெயந்தியையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களை வதை செய்வது, விற்பனை செய்யக் கூடாது என்றும், இறைச்சிக் கடைகளை திறந்து வைக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்ததுடன், தடையை மீறி திறக்கப்பட்டுள்ள கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேலூா் கோட்டை அருகே உள்ள மீன் மாா்க்கெட்டில் தடையை மீறி சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றில், பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனா். இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாட்சியா் செந்தில், வடக்கு போலீஸாா், மாநகராட்சி அதிகாரிகள் மீன் மாா்க்கெட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினா்.

அப்போது அங்கிருந்த மீன் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனா். வியாபாரிகள் சிலா் இறைச்சி ஏதும் விற்பனை செய்யவில்லை என்றும், மீன்கள் மட்டுமே விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனா். மீன்களும் இறைச்சி வகைதான். அவற்றையும் விற்பனை செய்யக் கூடாது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். இதைத்தொடா்ந்து மீன் மாா்க்கெட்டில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT