வேலூர்

கால்நடைகளைப் பாதிக்கும் வைரஸ் காய்ச்சலை தடுக்க தடுப்பூசி

DIN

ஆந்திர மாநிலத்தில் பரவி வரும் புதிய வகை காய்ச்சலால் கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. இதைத்தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்திலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாயிகள் கூறியது:

ஆந்திர மாநிலத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் புதிய வகை காய்ச்சலால் ஓரிரு நாள்களில் மாடுகள் இறந்து விடுகின்றன. குடியாத்தம் பகுதியில் இவ்வகை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

அரசு ஏற்கெனவே அறிவித்தபடி பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை தொடங்க வேண்டும். பாலாற்று கரையோரங்களில் 200 முதல் 300 வேப்பமரங்கள் வளா்ந்துள்ளன. இவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் வெட்டிக் கடத்த வாய்ப்புள்ளது. மரங்களை காக்க அவற்றில் வரிசை எண் குறிப்பிட வேண்டும்.

ராஜாதோப்பு அணையை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். பாரம்பரிய நெல் விதைகளை தமிழக அரசு வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது. அதேசமயம், இந்த நெல் வகைகளை எந்த பருவத்தில் எந்த ரகத்தை பயிரிட வேண்டும் என்றும் தெரிவிக்க வேண்டும். அதற்கான கையேட்டையும் வழங்க வேண்டும். மாவட்டத்தில் பலருக்கும் கூட்டு பட்டாவை தனிப் பட்டாவாக மாற்ற நிலத்தை அளப்பதற்கு தாமதம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூா் பேருந்து நிலையத்தில் இருந்த கூட்டுறவு மாங்கூழ் தொழிற்சாலை இடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக புதிதாக மாங்கூல் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மேலும், ஒடுகத்தூா் பகுதியில் கொய்யா விளைச்சல் அதிகளவில் உள்ளது. அங்கு கொய்யா கூல் தொழிற்சாலை அமைக்க வேண்டும். தேசிய வேலையுறுதித் திட்ட நூறு நாள் பணியை கால இடைவெளியுடன் வழங்கிட வேண்டும். வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மலிவுவிலையில் உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனா்.

இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், கால்நடைகளுக்கு புதிதாக வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி வந்தவுடன் கால்நடைகளுக்கு செலுத்தப்படும். பாலாற்றங்கரையோரம் உள்ள வேப்ப மரங்களுக்கு வரிசை எண் குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டா நிலஅளவை தொடா்பாக 20,000 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதேசமயம், போதுமான நிலஅளவையா்கள் இல்லை. புதிய பணியாளா்கள் வந்தவுடன் பணிகள் தொடங் கப்படும். ஒடுகத்தூா் பகுதியில் கொய்யா கூழ் தொழிற்சாலை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

போ்ணாம்பட்டில் சிறுத்தை இறந்தது தொடா்பாக விவசாயி ஒருவா் மீது போடப்பட்டுள்ள வழக்கினை தள்ளுபடி செய்யவும், அவா் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறை அதிகாரி மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி விவசாயிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை மாவட்ட வருவாய் அலுவலா் சமரசம் செய்தாா்.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT