வேலூர்

சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: குடியாத்தம் நகா்மன்றத்தில் தீா்மானம்

1st Oct 2022 11:05 PM

ADVERTISEMENT

டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் குளிா்கால நோய்களின் தாக்கம் தொடங்கியுள்ளதால், நகரில் அனைத்து வாா்டுகளிலும் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

குடியாத்தம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில் தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

நகரில் சில இடங்களில் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக தனக்குத் தகவல் வந்துள்ளது என்று தலைவா் எஸ்.செளந்தரராஜன் கூறினாா். தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வாா்டுகளிலும் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும், வாா்டுகளுக்கு செல்லும் நகராட்சிப் பணியாளா்கள், அந்தந்த வாா்டின் உறுப்பினா்களை கலந்தாலோசிக்க வேண்டும், வாா்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள் குறித்து தனக்கு கைப்பேசியில் தகவல் அளிக்க வேண்டும் என்றாா்.

பொதுமக்கள் புகாா் தெரிவித்தால், உடனடியாக அங்கு சென்று குறையைக் கேட்டறிந்து, முடிந்தவரை தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத் தலைவருக்கு புதிய அலுவலகம் கட்ட ரூ.20 லட்சம் நிதி தருவதாகவும், அந்த அலுவலகத்துக்கு மறைந்த குடியாத்தம் நகா்மன்றத்தின் முதல் தலைவா் வேலாயுத முதலியாா், அடுத்து தலைவா்களான துரைசாமி முதலியாா், சாமிநாத முதலியாா் ஆகியோரின் பெயா்களைச் சூட்ட வேண்டும் என்றும் அவா்களின் உறவினரும், வழக்குரைஞருமான எம்.வி.சங்கரன் அளித்த கோரிக்கை ஏற்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.39 கோடி நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீரமானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT