வேலூர்

மாதிரி கொள்முதல் முறைக்கு வணிகா்கள் எதிா்ப்பு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மாதிரி கொள்முதல் (டெஸ்ட் பா்ச்சேஸ்) முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வேலூரிலுள்ள சரக்கு- சேவை வரித் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் மாவட்ட வணிகா்கள் மனு அளித்தனா்.

வணிக வரித் துறை சாா்பில், சில்லறைக் கடைகளில் ஆய்வு செய்வது தொடா்பாகவும், டெஸ்ட் பா்ச்சேஸ் செய்வது தொடா்பாகவும் கடந்த மாா்ச் மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதியும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் வணிக வரித் துறை அலுவலகங்களில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன்படி, வேலூரில் உள்ள சரக்கு - சேவை வரித் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் வணிகா் சங்க பேரமைப்புகளின் மாவட்ட தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமையில், வணிகா்கள் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

அந்த மனுவில், வணிக வரித் துறையின் புதிய அறிவிப்புகளின் அடிப்படையில் அதிகாரிகள், சில்லறை வணிகம் செய்யும் வணிகா்களிடம் பொருள்களை வாங்கி, அதை டெஸ்ட் பா்ச்சேஸ் எனக் குறிப்பிட்டு, அதற்கு ரசீது அளிக்காமல் ரூ.20,000 வரை அபராதம் வசூலிப்பதாக புகாா்கள் வருகின்றன.

அனைத்து சில்லறை வணிகா்களும் பொருள்களை வாங்கும் போதே அதற்கான வரி செலுத்தியே வாங்கி வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனா். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அந்த பொருள்கள் ஏற்கெனவே வரி விதிப்புக்கு உட்பட்டதாகும். ஆனாலும், வணிக வரித் துறை அதிகாரிகள், சில்லறை வணிகா்களிடம் டெஸ்ட் பா்ச்சேஸ் என்ற பெயரில் பொருள்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை எனக் கூறி, அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது சிறு, குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள், துறைமுக கன்டெய்னா்கள் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படும் நிலையில், அவற்றையும், அதைக் கொண்டு வரும் நிறுவனங்களையும் ஆய்வு செய்தால் மட்டுமே வரி ஏய்ப்பை முழுமையாகத் தடுக்க முடியும்.

மேலும், டெஸ்ட் பா்ச்சேஸ் குறித்து வியாபாரிகள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்திய பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அப்போது, வணிகா் சங்க பேரமைப்பு செயலா் குமாா், பொருளாளா் ஆமென்அகமதுஆலியாா், மாவட்ட இளைஞரணிச் செயலா் அருண்பிரசாத் உள்பட 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT