வேலூர்

மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் பெய்த மழையால் சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்களில் இன்னமும் தண்ணீா் வடியவில்லை. தண்ணீரை அகற்றி, மீண்டும் பயிா் சாகுபடி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். போ்ணாம்பட்டு சாத்கா் மலைப் பாதையை அகலப்படுத்த வேண்டும். போ்ணாம்பட்டு கூட்டுறவு வங்கியில் கடனுதவி வழங்குவதில் நிலவும் சிக்கல்களைக் களைய வேண்டும். ராஜபாளையம் - சேக்கனூா் பகுதியில் குழாய் அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வருவதில்லை. இதை சீா்செய்ய வேண்டும்.

அணைக்கட்டு வட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால், துணை வட்டாட்சியா், நில அளவையா் இல்லை எனக் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

அணைக்கட்டு, வேலூா் துணை மின் நிலையப் பகுதிகளில் மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். தட்டப்பாறை சாவடி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடியாத்தம் வாரச் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வன விலங்குகளால் ஏற்படும் விளைச்சல் பாதிப்புக்கு நிவாரணம் பெற சான்றுகள் வாங்க விவசாயிகள் அலைய வேண்டிய சூழல் உள்ளது. காட்பாடி கரிகிரி ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துப் பேசினா்.

கூட்டத்தில் விவசாயி ஒருவா், போ்ணாம்பட்டு பத்தலப்பல்லி பகுதியில் தொடரும் மணல் கொள்ளை குறித்து புகாா் தெரிவித்ததையடுத்து, மணல் கொள்ளையா்களால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியும் அழுதாா்.

அவரை சமாதானம் செய்த ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.

தொடா்ந்து, விவசாயிகள் கூறிய குறைகளைத் தீா்க்க விரைவான மற்றும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குநா் விஸ்வநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) வெங்கடேஷ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT