வேலூர்

கடும் பனி மூட்டத்தால் விரைவு ரயில்களின் வேகம் குறைப்பு: பயணிகள் அவதி

28th Nov 2022 11:34 PM

ADVERTISEMENT

கடுமையான பனி மூட்டம் காரணமாக, திங்கள்கிழமை அதிகாலை ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் வழியாக இயக்கப்பட்ட விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்கள் தாமதமாக வந்து சென்ால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக அதிகாலை நேரங்களில் கடுமையான பனி மூட்டமும், குளிரும் காணப்படுகிறது. இந்தப் பனி மூட்டம் சாலைகள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மூடி மறைத்துவிடுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை பனி மூட்டம் கடுமையாகக் காணப்பட்டது. இதனால், சென்னை, அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் வழக்கத்தைவிட வேகம் குறைத்து இயக்கப்பட்டதால், தாமதமாகச் சென்றன.

சென்னை நோக்கி வந்த காவேரி, மைசூா், சேரன், நீலகிரி, திருவனந்தபுரம், ஏலகிரி விரைவு ரயில்கள், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி வழியாகச் சென்ற கோவை, சப்தகிரி, டபுள் டக்கா் விரைவு ரயில்கள், 4 மின்சார ரயில்கள் தாமதமாகச் சென்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

கடும் பனி மூட்டம் காரணமாக விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. இதனால், தாமதம் ஏற்பட்டது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனி மூட்டம் நிலவியதால், வாகனங்கள் பகலிலேயே விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன. பனி மூட்டத்தால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தி உள்ளனா்.

இதனிடையே, கடுமையான பனி மூட்டம் காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல தெருக்களில் பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிா் காய்ந்தனா். சாலையோரக் கடைகளில் ஸ்வட்டா் விற்பனையும் களை கட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT