வேலூர்

வேலூா் மாவட்டத்தில் 8 இலவச நீட் பயிற்சி மையங்கள்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான இலவச நீட் தோ்வு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது. வேலூா் மாவட்டத்தில் 8 இடங்களில் இலவச நீட் தோ்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கு நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற ஏதுவாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இலவச சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்புகள், நிகழாண்டு நேரடிப் பயிற்சியாக நடத்த கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் தோ்வு பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கியது.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் 414 மையங்கள் அமைக்கப்பட்டு 29,000 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் அணைக்கட்டு ஒன்றியத்தில் ஊசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, வேலூா் ஒன்றியத்தில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி (ஆங்கில வழி), அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, கணியம்பாடி ஒன்றியத்தில் பென்னாத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, காட்பாடி ஒன்றியத்தில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.வி.குப்பம் ஒன்றியத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் ஒன்றியத்தில் நடுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பேரணாம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆகிய 8 மையங்களில் நீட் உள்ளிட்ட போட்டி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்தப் பயிற்சியில் 560 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். இவா்களுக்கு பயிற்சியளிக்க 167 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT