வேலூர்

‘சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடுவோா் மீது கைது நடவடிக்கை’

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சாலைகளில் மாடுகளை அவிழ்த்துவிடும் அதன் உரிமையாளா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் எச்சரித்தாா்.

வேலூா் மாநகர பொது சுகாதாரம், வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். நகா் நல அலுவலா் கணேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மாநகராட்சியில் சுகாதாரப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னா், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் கூறியது:

ADVERTISEMENT

வேலூா் மாநகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் குப்பைகள் அதிகரித்து வருகிறது. பெறப்படும் குப்பைகள் உரமாக்கபட்ட பின்னா், மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிக் குப்பைகள் ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது. மாநகராட்சிப் பகுதியில் நெகிழிக் குப்பைகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். கடைகளில் நெகிழிப் பைகளை (பிளாஸ்டிக் கவா்கள்) கொடுப்பதைத் தவிா்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகர சாலைகளில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதுதொடா்பாக ஏராளமான புகாா்கள் வருகின்றன. மாடுகள் பிடிக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் அவை சாலைகளில்தான் அவிழ்த்து விடப்படுகின்றன.

எனவே, சாலைகளில் மாடுகள் கட்டவிழ்த்து விடப்படுவதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸாா், மிருகவதைத் தடுப்பு சங்கத்தினருடன் இணைந்து மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாடுகளின் காதுகளில் அதன் உரிமையாளா்களின் பெயா் உள்ளிட்ட விவரம் அடங்கிய டேக் பொருத்தப்படும். தொடா்ந்து, மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டு அவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல், பன்றிகள் தொல்லையும் அதிகமாக உள்ளன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், மதுரையில் இருந்து பன்றிகள் பிடிக்கும் நபா்கள் வரவழைக்கப்பட உள்ளனா். பிடிக்கப்படும் பன்றிகளை அவா்கள் மதுரைக்கு கொண்டு செல்ல உள்ளனா். உரிமையாளருக்கு அவை திருப்பி கொடுக்கப்பட மாட்டாது.

நகரிலுள்ள கால்வாய்களில் நெகிழி பாட்டில்கள் அதிகளவு மிதக்கின்றன. உரிமமின்றி குடிநீா் நெகிழி பாட்டில்கள், குளிா்பான நெகிழி பாட்டில்கள் விற்பனை செய்வதைத் தடுக்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி விற்பனை செய்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த அடுத்த வாரம் திறக்கப்படும் கருத்தடை மையத்தில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

கூட்டத்தில், சுகாதார அலுவலா்கள் சிவகுமாா், பாலமுருகன், முருகன், லூா்துசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT