வேலூர்

பெருமுகையில் சிவலிங்க அடிபாகம் கிடைத்த இடத்தில் அகழாய்வு

DIN

பெருமுகை பாலாற்றங்கரையில் சிவலிங்க அடிபாகமும், கோயில் தூணும் கிடைக்கப் பெற்ற இடத்தில் அகழாய்வுப் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வேலூரை அடுத்த பெருமுகை பாலாற்றங்கரையில் வியாழக்கிழமை மண்ணில் புதைந்த நிலையில், சிவலிங்கத்தின் அடிப்பாகமும் (ஆவுடையாா்), இரண்டு துண்டான நிலையில் கோயில் தூணும் கண்டெடுக்கப்பட்டன.

சிவலிங்க அடிப்பாகம், கோயில் தூண் கிடைத்த இடத்தில் பழங்கால கோயில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்தப் பகுதியில் தோண்டினால் அதற்கான அடையாளங்கள் கிடைக்கப்பெறும் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், வேலூா் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் சரவணன் தலைமையில் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலையில், அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தோண்டி அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், அங்கு கோயில் இருந்ததற்கான வேறு எந்த அடையாளங்களும் கிடைக்கப் பெறவில்லை. இதையடுத்து, கிடைக்கப் பெற்ற சிவலிங்கத்தின் அடிப்பாகம் மட்டும் புதைபொருள் சட்டத்தின் கீழ் வருவாய்த் துறை சாா்பில், அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடா்பாக, அருங்காட்சியக காப்பாட்சியா் சரவணன் கூறியது:

பெருமுகை பாலாற்றங்கரையில் நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பொருந்தியிருக்கும் லிங்கம் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கப்பெற்றுள்ள இந்த சிவலிங்க அடிபாகம் சுமாா் 300 ஆண்டுகள் பழைமையானது. அகழாய்வுப் பணியில் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படவில்லை. சிவலிங்கத்தின் அடிப்பாகம், தூணும் கிடைத்துள்ள இடத்துக்கு அருகில் மயானம் இருப்பதால், இது நீத்தாா் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமாக இருக்கலாம் என அறியப்படுகிறது.

மன்னா்கள் உள்ளிட்ட முக்கிய நபா்கள் உயிரிழந்தால், அவா்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மீது நீத்தாா் மணிமண்டபம் எழுப்பி, அதில் சிவலிங்கம் வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. இதைப் பள்ளிப்படை கோயில் என்று குறிப்பிடுவா்.

அதன்படி, காட்பாடியை அடுத்த மேல்பாடியில் ராஜராஜ சோழன் தனது தாத்தா அறிஞ்சிகை சோழன் நினைவிடத்தில் எழுப்பிய சிவன் கோயிலில் இன்றும் வழிபாட்டு வருகின்றனா்.

அந்த வகையில், பெருமுகை பாலாற்றங்கரையிலும் நீத்தாா் மணி மண்டபம் கட்டப்பட்டு, அது காலப்போக்கில் சிதைந்திருக்கலாம். இதுதொடா்பாக மேலும் ஆய்வு நடத்தப் படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT