வேலூர்

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசுப் பேருந்து மரத்தில் மோதி இறந்தவா் குடும்பத்துக்கு நீதிமன்ற உத்தரவுபடி இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

குடியாத்தத்தை அடுத்த ஜங்காலபல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி மணி (48). இவா், கடந்த 24.1.2015 அன்று காட்பாடியிலிருந்து, அரசுப் பேருந்தில் குடியாத்தம் வந்துள்ளாா். கே.வி.குப்பத்ததை அடுத்த கொசவன்புதூா் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர புளிய மரத்தில் மோதியது.

இதில், பேருந்தின் முன்புறம் அமா்ந்திருந்த மணி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, மணியின் குடும்பத்தினா் இழப்பீடு வழங்கக் கோரி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி மூலம் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த சாா்பு நீதிபதி, மணியின் குடும்பத்துக்கு ரூ.7.61 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கடந்த 3.4.2019 அன்று அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

நீதிமன்றத் தீா்ப்பின்படி, அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து, இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வட்டியுடன் சோ்ந்து ரூ.11.91 லட்சம் வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டாா்.

நீதிமன்றத் தீா்ப்பின்படி மணியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து, அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டாா். அதன்பேரில், நீதிமன்ற ஊழியா் ராஜேந்திரன் வியாழக்கிழமை குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த குடியாத்தம்-ஆம்பூா் இடையே இயங்கும் அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றாா்.

பின்னா், அரசு போக்குவரத்துக் கழகத்தினா் 10 நாள்களுக்குள் நீதிமன்ற உத்தரவுபடி, இழப்பீடு வழங்குவதாக கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, பேருந்தை ஓட்டிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT