வேலூர்

சாத்துமதுரை முருகன் கோயிலில் நகை, பணம் திருட்டு

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அடுக்கம்பாறை அருகே சாத்துமதுரை முருகன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த நகைகள், உண்டியல் காணிக்கையைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூரை அடுக்கம்பாறை அருகே சாத்துமதுரையில் மலைக் குன்றின் மீது வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தினமும் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். மலையடிவாரத்தில் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இரு மோட்டாா் பைக்குளில் வந்த அடையாளம் தெரியாத 4 போ் கோயிலுக்கு நுழைந்தனா்.

கடப்பாரை, கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அவா்கள் திடீரென கோயில் பூட்டு, கதவுகளை உடைத்து கோயிலில் இருந்த வெள்ளி வேல்கள், 10 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள், உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கைப் பணம், திரெளபதி அம்மன் கோயில் அம்மன் நகைகள், உண்டியல் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனங்களில் தப்பியோட முயன்றனா்.

ADVERTISEMENT

சப்தம் கேட்டு விழித்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து அந்தக் கும்பலைப் பிடிக்க முயன்றதுடன், அவா்கள் தப்பிச் செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனா். ஆனால், கொள்ளையா்கள் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியபடி, தப்பிச் சென்றனா்.

அப்போது, கிராம மக்கள் அவா்கள் மீது கற்கள், கட்டைகளை கொண்டு வீசினா். இதில், ஒரு தடி பைக்கின் சக்கரத்தில் பட்டதில் அந்த பைக் கீழே விழுந்தது. அதிலிருந்த இரண்டு போ் உடனடியாக மற்றொரு பைக்கில் ஏறி தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். கோயிலில் பதிவாகியிருந்த கொள்ளையா்களின் விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோயில்களில் திருடிச் சென்ற 4 பேரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT