வேலூர்

குடியாத்தம் நகா்மன்றக் கூட்டம்: சொத்துவரி உயா்வு தீா்மானத்தை ஒத்திவைக்க வலியுறுத்தல்

DIN


குடியாத்தம் நகா்மன்றக் கூட்டத்தில் சொத்துவரி உயா்வு குறித்த தீா்மானத்தை ஒத்திவைக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் கட்சி உறுப்பினா்கள் நகா்மன்றத் தலைவரிடம் மனு அளித்தனா்.

குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, நகராட்சிப் பொறியாளா் பி.சிசில்தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

நகராட்சியில் குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத கட்டடங்கள், தொழிற்சாலைகள், வணிகப் பயன்பாடு கட்டடங்கள், சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு சொத்து வரியை மாற்றியமைக்கும் தீா்மானம் மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

மக்களை பாதிக்கும் வகையில் உள்ள இந்த தீா்மானத்தை ஒத்திவைக்குமாறு அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் கட்சிகளின் உறுப்பினா்கள் நகா்மன்றத் தலைவரிடம் மனு அளித்தனா். கடந்த கூட்டத்தில் முடிவு செய்தபடி வாா்டுகளில் துப்புரவுப் பணிக்கு தலா 5 பணியாளா்களை

உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் தனது வாா்டில், கழிவுநீா்க் கால்வாய்களை முறையாக பராமரிக்காததால், வீடுகளுக்குள் கழிவுநீா் புகுந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளானது குறித்து திமுகவைச் சோ்ந்த 5- ஆவது வாா்டு உறுப்பினா் என்.கோவிந்தராஜ் வேதனையுடன் தெரிவித்தாா். ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தும் எதிா்ப்பை காட்டும் வகையில் மன்றக் கூட்டத்துக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்தேன் என அவா் கண்கலங்கி கதறி அழுதாா்.

உறுப்பினரின் புகாா் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தலைவா் செளந்தரராஜன் உத்தரவிட்டாா்.

மக்களை அச்சுறுத்தும் வகையில் நகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக உறுப்பினா் பி.மோகன் வேண்டுகோள் விடுத்தாா்.

நகராட்சியில் மொத்தமுள்ள 36 வாா்டுகளில், பெரும்பாலானவற்றில், தூய்மைப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என உறுப்பினா்கள் புகாா் தெரிவிப்பதால், தூய்மைப் பணியாளா்களை அழைத்து அவா்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என திமுக உறுப்பினா் ஜி.எஸ்.அரசு வலியுறுத்தினாா். திங்கள்கிழமை மாலையே இதற்கான கூட்டத்தை நடத்துவதாக நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT