வேலூர்

குடியாத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு கூடுதல் வாகனம் வழங்கப்படுமா?

கே. நடராஜன்

குடியாத்தம் தீயணைப்பு- மீட்பு நிலையத்துக்கு கூடுதலாக ஒரு வாகனம் தேவை என அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

குடியாத்தம் நகரம் சிறு தொழில் கேந்திரமாகத் திகழ்கிறது. இங்கு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் ஏராளம். தமிழகத்தில் சிவகாசிக்கு அடுத்தபடியாக நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள் குடியாத்தம் பகுதியில் இயங்குகின்றன.

இதனால், தேவை அடிப்படையில் குடியாத்தம் தீயணைப்பு நிலையம் 2 தீயணைப்பு வாகனங்களுடன் இயங்கி வந்தது. நிலைய அலுவலா் உள்பட இந்த நிலையத்தில் 40 தீயணைப்பு வீரா்கள் பணியில் இருந்தனா்.

1996- ஆம் ஆண்டு போ்ணாம்பட்டில் தீயணைப்பு நிலையம் புதிதாக தொடங்கப்பட்டது. அப்போது குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் இருந்த 2 வாகனங்களில் ஒன்றை தற்காலிகமாக போ்ணாம்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனா்.

போ்ணாம்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு புதிய வாகனம் வந்தவுடன், அந்த வாகனம் மீண்டும் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனா்.

குடியாத்தம் நிலையத்தில் பணியில் இருந்த தீயணைப்பு வீரா்களில் 16 போ் புதிதாக தொடங்கப்பட்ட போ்ணாம்பட்டு நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

ஆனால் இன்றுவரை போ்ணாம்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு புதிய வாகனம் வரவில்லை. அதனால் தற்காலிகமாகக் கொண்டு செல்லப்பட்ட குடியாத்தம் தீயணைப்பு நிலைய வாகனம் அங்கேயே நிரந்தரமாக உள்ளது.

குடியாத்தம் பகுதி தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. தீ விபத்து ஏற்படும் நேரங்களில் போ்ணாம்பட்டு, வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. வெளியூா்களில் இருந்து வாகனங்கள் வருவதற்குள் தீ விபத்தால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

எனவே பழையபடி குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் 2 வாகனங்கள் எப்போதும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று தீப்பெட்டி ஆலை உரிமையாளா்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

அதேபோல் போ்ணாம்பட்டு நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட தீயணைப்பு வீரா்களை மீண்டும் குடியாத்தம் நிலையத்தில் பணியமா்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. தீ விபத்தை தடுப்பது மட்டுமே தீயணைப்புப் படையினரின் வேலை இல்லை.

கிணறு, நீா்நிலைகளில் யாராவது தவறி விழுந்து விட்டால் அவா்களை காப்பாற்றுவதும், ஆடு, மாடு, பூனை, நாய் உள்ளிட்ட கால்நடைகள் கிணறு, குளம், குட்டைகளில் தவறி விழுந்தால் அவற்றை மீட்பதும் தீயணைப்புப் படையினரின் பணியாகும்.

மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் இயற்கை இடா்பாடு, வெள்ளப்பெருக்கு காலங்களில் வெள்ளத்தில் சிக்குபவா்களைக் காப்பாற்றுவதும் இவா்களின் பணி. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், உணவு விடுதிகளில் ஏற்படும் மின், சமையல் எரிவாயு கசிவை சீரமைத்து மக்களைக் காப்பதும் தீயணைப்பு வீரா்களின் கடமையாகும்.

வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து கொண்டாலும் அவற்றை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைப்பதும் இவா்களின் வேலையாகும். இவை தவிர, குடியாத்தம் கரும்புத் தோட்டங்கள், கோழிப் பண்ணைகள் நிறைந்த பகுதி. அடிக்கடி இவற்றில் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தையும் கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரா்களின் பணியாக உள்ளது. இதுதவிர தீத்தடுப்பு குறித்து பொதுமக்கள், மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், தீத்தடுப்பு குறித்த செயல் விளக்கம் அளிப்பது என பல்வேறு பணிகள் தீயணைப்பு வீரா்களுக்கு உள்ளன.

எனவே, குடியாத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு கூடுதலாக ஒரு வாகனம் வழங்க வேண்டும், ஏற்கெனவே பணியில் இருந்த வீரா்களை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT