வேலூர்

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்

25th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேலூா்: கூலி உயா்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வேலூா் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

வேலூா் மாநகராட்சியில் தெருக்களைச் சுத்தம் செய்யும் பணி, குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணி, டெங்கு கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் சுமாா் 1,200 பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

13 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவா்களுக்கு, நாளொன்றுக்கு தினக் கூலியாக ரூ. 676 வழங்கப்பட வேண்டிய நிலையில், தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 426, டெங்கு பணியாளா்களுக்கு ரூ.388 மட்டுமே தினக் கூலியாக வழங்கப்படுவதாகவும், அதிலும் ஒப்பந்ததாரா் மாதம் ரூ. 2,000 வீதம் பிடித்தம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக கூலி உயா்வு அளிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இதனால், பாதிக்கப்பட்ட வேலூா் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் கூலி உயா்வு கோரி திங்கள்கிழமை முதல் 10 நாள்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். போராட்டத்தின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, அவா்கள் வேலூா் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், ஆணையா் ப.அசோக்குமாா் ஆகியோா் பேச்சு நடத்தினா். தூய்மைப் பணியாளா்களுக்கு கூலி உயா்வு அளிப்பது குறித்து சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கூலி உயா்வு அளிக்கப்படும் என்றனா்.

எனினும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி விட்டு தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT