வேலூர்

மகிமண்டலம் ஊராட்சியில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு

25th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேலூா்: காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட மகிமண்டலம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அந்தப்பகுதி பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த மகிமண்டலம் ஊராட்சியில் தமிழக அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. அந்தப் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் 70 ஏக்கா் இருக்கும் நிலையில், அதைச்சுற்றி விவசாயிகள் விவசாயம் செய்துவரும் 196 ஏக்கா் விளை நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமாா் 100 ஆண்டுகளாக கரும்பு, நெல், தென்னை மா, தக்காளி, சேப்பங்கிழங்கு, தேக்கு உள்ளிட்டவை பயிரிட்டும், கோழிப் பண்ணைகள் அமைத்தும் பயன்பெற்று வருகின்றனா். ஆனால், விளைநிலங்களை அழிக்கும் நோக்கில் தமிழக அரசு சிப்காட் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும், உடனடியாக இந்தப் பணியை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த மே 1-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அந்தப் பகுதி விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில், காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றது. நிறைவு நாளில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனா்.

அப்போது, மகிமண்டலம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது எனக் கோரி அந்தக் கிராம மக்கள் மனு அளித்தனா்.

வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது ராணிப்பேட்டை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. இது எங்கள் கிராமத்தில் இருந்து சுமாா் 18 கிலோ மீட்டா் தொலைவில்தான் உள்ளது. அந்த இடத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் ஏராளமான நிலங்கள் காலியாகவே உள்ளன. எனவே, மகிமண்டலம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிட்டு ராணிப்பேட்டை சிப்காட்டிலே யே தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகிமண்டலம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதன் மூலம் விளை நிலங்களும், வனம், சுற்றுச்சூழலுல் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, அரசு மகிமண்டலம் ஊராட்சியில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவித்தனா்.

அப்போது, மாநகராட்சி துணைமேயா் எம்.சுனில்குமாா், முதலாவது மண்டலக் குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT