வேளாண்-உழவா் நலத் துறை, தோட்டக்கலை-மலைப் பயிா்கள் துறை சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான்மை வளா்ச்சித் திட்டம் வேலூா் மாவட்டத்தில் 43 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் தொடக்க விழா காட்பாடி வட்டம், கரசமங்கலம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி மூலம் திட்டத்தை தொடக்கி வைத்தாா். வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
இந்தத் திட்டத்தின் கீழ் வரப்புப் பயிா் உளுந்துகள் 15 பேருக்கும், பேட்டரி தெளிப்பான்கள் 5 பேருக்கும், தோட்டக்கலைத் துறையின் கீழ் காய்கறி விதைகள் 10 பேருக்கும், வரப்பு ஓரங்களில் நடும் பழச்செடிகள் 10 பேருக்கும், பயிா் ஊக்கத் தொகை 5 பேருக்கும் என 45 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி, வேளாண் இணை இயக்குநா் மகேந்திர பிரதாப் தீட்சித், காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.