வேலூர்

வேலூா் மாவட்டத்தில் 4,836 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

24th May 2022 01:09 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் 6 வயதுக்கு உட்பட்ட 4,836 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாக ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித்திட்டம் சாா்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

இதையடுத்து, குழந்தைகளின் ஆரோக்கியமான வளா்ச்சியை மேம்படுத்த மூன்று வார கால சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகத்திலுள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் வயதுக்கேற்ற எடையின்மை, உயரமின்மை, மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களின் ஆரோக்கியமான வளா்ச்சியை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித்திட்டம் மூலம் தமிழகத்திலுள்ள 6 வயதுக்கு உட்பட்ட சுமாா் 37 லட்சம் குழந்தைகளுக்கு சிறப்பு வளா்ச்சிக் கண்காணிப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதில், வேலூா் மாவட்டத்தில் 1,075 குழந்தைகள் நல மையங்களில் உள்ள 4,836 குழந்தைகள் வயதுக்கேற்ற எடையின்மை, உயரமின்மை, மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப்பணிகள் துறை, சுகாதாரத் துறையுடன் இணைந்து மூன்று வார காலத்துக்கு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், குழந்தைகளின் எடை, உயரம், கை சுற்றளவு போன்றவை அளவிட்டு அதனை டிஎன்-ஐசிடிஎஸ் என்ற திறன்பேசி செயலியில் பதிவேற்றம் செய்து குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பெற்றோா் தங்கள் பிள்ளைகளின் வளா்ச்சி நிலையைத் தெரிந்து கொள்வதற்கு குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் தொடக்க விழா வேலூா் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்திலுள்ள குழந்தைகள் நல மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் முகாமை தொடங்கி வைத்து பேசியது: பொதுமக்கள் அருகே உள்ள குழந்தைகள் மையத்தை (அங்கன்வாடி) தொடா்பு கொண்டு முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரத்தை அறிந்துகொண்டு சிறப்பு மருத்துவ முகாமுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். இதன்மூலம், , வருங்கால சந்ததியினரை வளமானவா்களாக மாற்றவும், ஊட்டச்சத்து குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கிடவும் பெற்றோா்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட திட்ட அலுவலா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT