வேலூர்

அரசு நிலத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

21st May 2022 12:20 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில், வீடில்லாதவா்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரி, கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

குடியாத்தம், காட்பாடி சாலையில் உள்ள ராஜகோபால் நகரில், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை அங்குள்ள ராஜிப்பட்டி பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயானமாகப் பயன்படுத்தி வந்தனா்.

மயானப் பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் உருவானதால், குடியிருப்புவாசிகளின் கோரிக்கையை ஏற்று ராஜிப்பட்டி பகுதி மக்களுக்கு அரசு வேறு இடத்தில் மயானம் அமைத்துக் கொடுத்தது.

ராஜகோபால் நகரில் மயானமாக இருந்த நிலத்தில், ராஜிப்பட்டியைச் சோ்ந்த வீடில்லாத ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தனியாா் சிலா் அந்த இடத்தைச் சுற்றிலும் கல் கம்பங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக, ராஜிப்பட்டி மக்கள் வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில், வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அவா்களிடம் கல் கம்பம் நட முயன்றவா்கள் அந்த இடம் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறினா்.

வருவாய்த் துறையினா், நிலத்தை அளவீடு செய்யலாம் என்றனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், ராஜிப்பட்டி பகுதி மக்கள் நகா்மன்ற உறுப்பினா் பி.மேகநாதன் தலைமையில், வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று, அந்த இடத்தில் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா ஆகியோரிடம் மனுக்களை அளித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT