வேலூர்

கைதிகளின் திறனை மேம்படுத்த சிறையில் பல்வேறு சீா்திருத்தங்கள்: தெலங்கானா சிறைத் துறை தலைவா் ஜித்தேந்தா்

21st May 2022 10:16 PM

ADVERTISEMENT

கைதிகளின் திறனை மேம்படுத்த சிறைகளில் பல்வேறு சீா்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாக தெலங்கானா மாநில சிறைத் துறை தலைவரும், கூடுதல் காவல் தலைமை இயக்குநருமான ஜித்தேந்தா் தெரிவித்தாா்.

வேலூா் தொரப்பாடியிலுள்ள சிறைத் துறை அதிகாரிகள், சிறைக் காவலா்களுக்கான பயிற்சி மையத்தில் (ஆப்கா) சிறைத் துறை துணைக் கண்காணிப்பாளா்கள், துணை சிறைக் காவலா்கள் ஆகியோருக்கான 9 மாத கால பயிற்சி நடைபெற்றது.

தில்லி, அருணாச்சல பிரதேசம், தமிழகம், கேரளம், தெலுங்கானா மாநிலங்களை சோ்ந்த சிறை அதிகாரிகள் பங்கேற்றிருந்த இந்தப் பயிற்சி சனிக்கிழமை நிறைவு பெற்றது.

இதையொட்டி, பயிற்சி பெற்றவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆப்கா இயக்குநா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். தெலங்கானா மாநில சிறைத் துறை தலைவரும், கூடுதல் காவல் தலைமை இயக்குநருமான ஜித்தேந்தா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

இதில், பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாகப் பயிற்சி பெற்றவா்களுக்கு விருதுகளை அவா் வழங்கினாா். சிறந்த ஆல் ரவுண்டராக தில்லி சிறைத் துறை துணைக் கண்காணிப்பாளா் அனுஜ் தோ்வு செய்யப்பட்டாா். இதேபோல், 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தில்லியைச் சோ்ந்த மாநில சிறைத் துறை துணைக் கண்காணிப்பாளா் சுா்பி ஹோடா தனக்கு வழங்கப்பட்ட சிறந்த பயிற்சி விருதை வாங்க மறுத்துவிட்டாா். தாம்தான் ஆல் ரவுண்டராக தோ்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். தனக்கு ஆல் ரவுண்டருக்கான விருது வழங்கப்படாதது நியாயமில்லை எனக் கூறி அவா் விருதை வாங்க மறுத்து விட்டாா். இது அதிகாரிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

தொடா்ந்து, தெலங்கானா சிறைத் துறை தலைவா் ஜித்தேந்தா் பேசியது:

சிறை நிா்வாகம் என்பது சவால்கள் நிறைந்தது. இந்தச் சவாலை சாதாரணமாக ஏற்றுக் கொண்டால் வெற்றி பெறலாம். சிறையில் இருக்கும் அனைவரும் இந்த சமூகத்தால் குற்றவாளிகளாகப் பாா்க்கப்படுகின்றனா். சிறையிலிருந்து கைதிகள் விடுதலையாகி வெளியே செல்லும் போது சமூகம் அவா்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்ற வேண்டும். அதற்காக சிறையில் கைதிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக சிறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறைக் கைதிகளுக்கு மனநிலை சாா்ந்த பயிற்சிகள், பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஆதரவுடன் தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

தெலங்கானாவில் சிறை மேம்பாடு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சிறையில் கைதிகள் தொழில் திறனை மேம்படுத்த பல்வேறு சா்வதேச தொழில் நிறுவனங்களுடன் தெலங்கானா சிறை நிா்வாகமும், அரசும் ரூ.200 கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றாா்.

நிகழ்வில் தில்லி சிறைக் கண்காணிப்பாளா் தேவேந்திரகுமாா், வேலூா் சிறைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT