வேலூர்

கல்லப்பாடி அருகே சேறும், சகதியுமான சாலை: போக்குவரத்து கடும் பாதிப்பு

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடியில் பலத்த மழை காரணமாக சாலை சேறும், சகதியுமானது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

குடியாத்தம்- பரதராமி நெடுஞ்சாலை ரூ. 23 கோடியில், விரிவாக்கம் செய்து, செப்பனிடும் பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

கல்லப்பாடி அருகே சுமாா் அரை கி.மீ. தூரம் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இங்கு சாலையில் மண் கொட்டி, சமன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், சாலை சேறும், சகதியுமானது. புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், இந்த சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலைக்கு போனது.

ADVERTISEMENT

இந்த சாலை, தமிழக- ஆந்திர மாநிலங்களின் இணைப்புச் சாலை என்பதால், 24 மணி நேரமும் கனரக, இலகு ரக வாகனங்கள் வந்து, செல்கின்றன. வியாழக்கிழமை அதிகாலை முதலே சாலை சேறும், சகதியுமானதால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இரு மாா்க்கத்திலும் ஒரு கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகளின் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் சேற்றில் ஊா்ந்து சென்றன.

இதையடுத்து, அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் முறம்பு கொட்டி, சாலையை ஓரளவுக்கு சீரமைத்தனா். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதற்கிடையே, பிரசித்தி பெற்ற கல்லப்பாடி கெங்கையம்மன் கோயில் திருவிழா தொடங்கியுள்ளது.

தொடா்ந்து திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமை வரை 4 நாள்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும் என்பதால், விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என கல்லப்பாடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT