வேலூர்

2 ஆண்டுக்குப் பிறகு ஏரித் திருவிழா: பல்லாயிரக்கணக்கானோா் திரண்டனா்

12th May 2022 12:07 AM

ADVERTISEMENT

அணைக்கட்டு அருகே வேலங்காடு கிராமத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்ற பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வேண்டுதலை நிறைவேற்றினா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திலுள்ள வேலங்காடு பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வேலூரிலிருந்து அணைக்கட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு கிராமங்களின் முக்கிய திருவிழாவாக இது விளங்குகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவை காண சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் வண்டி, வாகனங்களில் வந்து செல்வது வழக்கம்.

கரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக புஷ்பரத ஏரித் திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. நிகழாண்டு தொற்று பரவல் குறைந்து ஊரடங்கு முழுமையாக தளா்த்தப்பட்ட நிலையில், வேலங்காடு புஷ்பரத ஏரித் திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த மாதம் 27-ஆம் தேதி அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், மே 8-ஆம் தேதி ஏரியில் பச்சை போடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அம்மன் புஷ்பரதத்தில் ஏறி வல்லண்டராமத்தில் வீதியுலா வந்தாா்.

ADVERTISEMENT

புதன்கிழமை காலை அன்னாசிபாளையத்தை புஷ்பரதம் அடைந்தது. அங்கு ஏரித் திருவிழா மதியம் வரை நடைபெற்றது. பிறகு புஷ்பரதம் வேலங்காட்டை சென்றடைந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கற்பூரம் ஏந்தியும், உப்பு, மிளகு உள்ளிட்ட பொருட்களை அம்மன் மீது இறைத்தும் நோ்த்திக்கடன்களைச் செலுத்தினா்.

திருவிழாவை காண வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்திருந்தனா்.

உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, கால்நடைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ பொற்கொடியம்மனுக்கு கிராம மக்கள் வேண்டிக் கொள்வா். திருவிழாவின் போது மண் உருவ மனித பொம்மைகள், கால்நடைகளின் பொம்மை களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவா். அவ்வாறே நிகழாண்டு திருவிழாவின் போதும் ஏராளமானோா் தங்களது காணிக்கைகளைச் செலுத்தினா். பலா் முடி காணிக்கையையும் செலுத்தினா்.

புதன்கிழமை நடைபெற்ற ஏரித் திருவிழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்கியது. கூட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

புஷ்பரதம் வியாழக்கிழமை (மே 12) பனங்காட்டில், வெள்ளிக்கிழமை (மே 13) வேலங்காட்டில் வீதியுலா வருகிறது. தொடா்ந்து, புஷ்பரதம் சனிக்கிழமை (மே 14) வல்லண்டராமத்தை அடைகிறது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT