வேலூர்

கணவா் வெட்டிக் கொலை: மனைவி கைது

12th May 2022 12:05 AM

ADVERTISEMENT

வேலூரில் கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் வேலப்பாடி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குமரவேல் (60). லாரிகளை பழுதுபாா்க்கும் இடத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி கோமதி (48). வேலூா் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். தம்பதிக்கு 2 மகள்கள். ஒருவருக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளாா். மற்றொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறாா்.

இந்த நிலையில், குமரவேல் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி பொழுதைக் கழித்து வந்ததுடன், தினமும் மது போதையில் கோமதியிடம் தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை இரவு குமரவேல் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாராம். அப்போது, குமரவேல் கத்தியை எடுத்து கோமதியை வெட்டியதாகவும், இதில் அவரது முகம், நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்ததாம்.

உயிா் பிழைக்க ஓடிய கோமதி கத்தியைப் பிடுங்கி கணவரைச் சரமாரியாக வெட்டினாா். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த வேலூா் தெற்கு காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பலத்த காயமடைந்த கோமதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். குமரவேலின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோமதியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT