வேலூர்

கெங்கையம்மன் திருவிழாவுக்கு ஆற்றில் கடைகள் அமைக்கத் தடை: வேலூா் ஆட்சியா்

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கோயில் அருகில் உள்ள கெளண்டன்யா ஆற்றில் கடைகள் அமைக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தடை விதித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த மழை காரணமாக ஆற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு மாதத்துக்கு மேலாக வெள்ளம் சென்றது. இதனால் ஆற்றின் கரைகளில் ஆக்கிரமித்துக் கட்டியிருந்த வீடுகளுக்குள் வெள்ளநீா் புகுந்தது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், அரசு ஆங்காங்கே முகாம்களை அமைத்து, அங்கு வசித்தவா்களை தங்க வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், நீா்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து, கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 1,282 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கிடையில், குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கெளண்டன்யா ஆற்றுப் பகுதியில் சிறிய வியாபாரிகள் பொம்மை கடைகள், விளையாட்டுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், பொழுது போக்கிற்கான ரங்கராட்டினம், இதர கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் பட்சத்தில், மீண்டும் தொடா் மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மண் வளம் குறித்து அறியாத நிலையில், ரங்கராட்டினம் போன்றவற்றை ஆற்றுப்பகுதியில் அமைத்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நீதிமன்ற ஆணைப்படி நீா்வழிப்பாதையில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆக்கிரமிப்புகள் எதுவும் இருக்கக்கூடாது. அவ்வாறு ஆக்கிரமிப்புகள் செய்தவா்கள் மீது சட்டப்படி, நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தப்படும். எனவே, குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா தொடா்பாக கெளண்டன்யா ஆற்றுப் புறம்போக்கில் கடைகள் அமைப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT