வேலூர்

பொது வேலைநிறுத்தம்: வேலூா் சரகத்தில் 4,000 போலீஸாா் பாதுகாப்பு

28th Mar 2022 11:16 PM

ADVERTISEMENT

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, வேலூா் காவல் சரகத்துக்குள்பட்ட வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் சுமாா் 4,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தப் போாட்டத்தையொட்டி, வேலூா் காவல் சரகத்துக்குள்பட்ட வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்த நான்கு மாவட்டங்களில் சுமாா் 4,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படாத வகையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) ஜ.ஆனிவிஜயா தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்தில் மட்டும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில், 8 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 40 காவல் ஆய்வாளா்கள், 198 காவல் உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 38 இடங்களில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும், வங்கிகள், தபால் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து பணிமனைகள், மின்வாரியங்கள் எதிரே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முக்கிய சாலைச் சந்திப்புகளிலும் போலீஸாா் வாகனச் சோதனை நடத்தினா். முக்கிய பேருந்து வழித்தடங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா்.

மாவட்டம் முழுவதும் பொதுமக்கள், அரசு சொத்துகளுக்கு சேதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT