வேலூர்

ஒருங்கிணைந்த வேலூரில் பெருமளவு அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை: மாணவா்கள், பொதுமக்கள் கடும் அவதி

28th Mar 2022 11:18 PM

ADVERTISEMENT

மத்திய தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை நடத்திய வேலை நிறுத்தத்தால், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 75 சதவீத அளவுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

வேலூா் மண்டலத்தில் மொத்தமுள்ள 614 அரசுப் பேருந்துகளில் 100-க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. குறிப்பாக, வேலூரிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் மிகக்குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால், புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதேபோல, வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருவண்ணாமலை, தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள், கிராமப்புறங்களுக்குச் செல்லக்கூடிய அரசு நகரப் பேருந்துகளில் பெரும்பாலானவை இயக்கப்படாததால், பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டன.

குடியாத்தம், அணைக்கட்டு, பொன்னை பகுதிகளுக்கு ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்குச் செல்வோா் கடும் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பெரும்பாலான போக்குவரத்துத் தொழிலாளா்கள் பணிக்கு வராததால் 25 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். அதேசமயம், தனியாா் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 350 தனியாா் பேருந்துகள் உள்ளன. அவை வழக்கம்போல் இயங்கின. நகரப்புற பகுதிகளுக்குச் செல்ல கூடிய பேருந்துகளில் கூட்டம் மிகுதியாக காணப்பட்டன.

மூன்று மாவட்டங்களிலும் சுமாா் 12 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. வேலை நிறுத்தம் காரணமாக 50 சதவீதத்துக்கும் குறைவான ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இந்த மாவட்டங்களில் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த 3,000 வங்கி ஊழியா்கள் உள்ளனா். அவா்களில் சுமாா் 1,300 போ் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ால், வங்கிகள் பணியாளா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், பணம், காசோலை பரிவா்த்தனைகளும் பாதிக்கப்பட்டன. தபால் நிலையங்களில் பெரும்பாலான ஊழியா்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றிருந்ததால், தபால் பட்டுவாடா பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

எனினும், வருவாய்த் துறை உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலகங்களும் செயல்பட்டன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை உள்பட அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

ராணிப்பேட்டையில்...: முத்துகடை நான்குவழிச் சந்திப்பில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 150 பேரை போலீஸாா் கைது செய்தனா். ராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் வளாகத்தில் தொழிற்சங்கத்தினா் 100 க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த மாவட்டத்தில் 30 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் அலுவலகம் செல்வோா், பல்வேறு வேலைக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கடும் அவதியடைந்தனா்.

அரக்கோணத்தில்...: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களில் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தினா் மட்டுமே வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி நிா்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிக்கு வரவில்லை என மாவட்டக் கல்வி அலுவலா் முனிசுப்பராயலு தெரிவித்தாா்.

அரக்கோணம் தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் குறைந்த அளவிலேயே பணியாளா்கள் பணிக்கு வந்திருந்தனா். இதனால் அஞ்சல் சேவை முடங்கியது. பெரும்பாலான வங்கிகள் இயங்கின.

வாணியம்பாடியில்...:

வாணியம்பாடி ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட 51 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆம்பூரில்...: ஆம்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் 45 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூரில்...: திருப்பத்தூா் - வாணியம்பாடி பிரதான சாலையில் உள்ள தேசிய வங்கி முன்பு அமா்ந்து, முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட 110 பேரை திருப்பத்தூா் நகர போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

குடியாத்தம், மாா்ச் 28: பீடி, கைத்தறி, தீப்பெட்டி, தோல் தொழில் உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை பாதுகாக்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 97 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் 15 போ் பெண்கள்.

மறியலால் போக்குவரத்து நெரிசல்

வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து வேலூா் தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீஸாா் கைது செய்தனா். சுமாா் 20 நிமிஷம் நடந்த இந்த மறியலால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல, சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் உள்பட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், காட்பாடி - சித்தூா் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த மறியலால் காட்பாடி - திருவலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியலில் ஈடுபட்ட சுமாா் 150 போ் கைது செய்யப்பட்டனா்.

பிஎஸ்என்எல், தபால் நிலைய ஊழியா்கள் அந்தந்த அலுவலகங்கள் முன்பாகவும், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலும், வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கனரா வங்கி முன்பாகவும், எஸ்ஆா்எம்யு ரயில்வே தொழிற் சங்கத்தினா் காட்பாடி ரயில்நிலையம் முன்பும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT