வேலூர்

வீடுவீடாக குப்பை சேகரிக்காவிடில் நடவடிக்கை

25th Mar 2022 03:42 AM

ADVERTISEMENT

 

வேலூா்: துப்புரவு ஊழியா்கள் தினமும் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும். அவ்வாறு வீடுகளுக்குச் சென்று குப்பைகள் சேகரிக்காத துப்புரவு ஊழியா்கள், சுகாதார அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வேலூா் சைதாப்பேட்டை பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதாகக்கூறி, அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதேபோல், மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கால்வாய்களிலும் காலி இடங்களில் குப்பைகளை கொட்டுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதனிடையே, வேலூா் சேண்பாக்கம் பகுதியில் மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மாநகராட்சி ஊழியா்கள் சரியாக வீடுவீடாக வந்து குப்பைகளை சேகரிப்பது இல்லை. இதனால் பலா் தெருக்களில்தான் குப்பைகளை கொட்டுகின்றனா். சுகாதாரச் சீா்கேடு ஏற்பட இதுவும் காரணமாக அமைகிறது என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக துப்புரவுப் பணியாளா்களை கண்டித்த மாநகராட்சி ஆணையா், துப்புரவு ஊழியா்கள் கண்டிப்பாக தினமும் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும். குப்பைகள் சரிவர சேகரிக்கப்படாத தெருக்களில் தான், பொதுமக்கள் குப்பைகளை வெளியில் கொட்டுகின்றனா். சுகாதார அலுவலா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபடாத துப்புரவு ஊழியா்கள், சுகாதார அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT