வேலூர்

தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி: வேலூா் 16 இடங்களில் நடைபெற்றது

25th Jun 2022 10:11 PM

ADVERTISEMENT

தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட 16 இடங்களில் நடைபெற்றது.

இதில், தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், குப்பைகளைத் தரம் பிரித்து அளித்தல் தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதுடன், தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

வேலூா் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 2-ஆவது மண்டலம் சாா்பில் சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் லூா்துசாமி வரவேற்றாா். மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் பங்கேற்று பொதுமக்களுக்கு மஞ்சள் நிற துணிப் பைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, பொதுமக்கள் நெகிழிப் பைகளைத் தவிா்த்து துணிப் பைகளைப் பயன்படுத்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. 2-ஆவது மண்டலத்துக்குட்பட்ட கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணியை தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல், 4-ஆவது மண்டலத்துக்குட்பட்ட கஸ்பா, மாசிலாமணி மைதானத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல குழுத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். உதவி ஆணையா் பிரபுகுமாா் ஜோசப், சுகாதார அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்கும்போது மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து பெற்று மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஊழியா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளா்களிடம் பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும். நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தொடா்ந்து, மாசிலாமணி பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரா்கள் மூலம் ஒட்டுமொத்த தூய்மைப் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் ஈஸ்வரன், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். நெகிழி ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் கூறியது: வேலூா் மாநகராட்சியில் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமை தோறும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதன்மூலம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். அதன்படி, சனிக்கிழமை வேலூா் மாநகராட்சியில் 16 இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றாா்.

ஆற்காட்டில்...: ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி மூலம் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு ஓவியப் போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

இதில், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வாளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள், பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT