வேலூா் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அரசு ஐடிஐ ஆசிரியையிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களை விரிஞ்சிபுரம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னையைச் சோ்ந்த மாதினி(56), வேலூரை அடுத்த மேல்மொணவூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) ஆசிரியையாகப் பணியாற்றுகிறாா். இதற்காக மேல்மொணவூா் அம்மன் நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ள இவா் அங்கிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்து கொண்டுள்ளாா்.
வழக்கம்போல் புதன்கிழமை பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்ற அடையாளம் தெரியாத இருநபா்கள், சாலையில் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்துக்குச் சென்றதும் மாதினி அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இது குறித்து மாதினி விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.