வேலூர்

வேலூா் மாவட்டத்தில் 5 மாதங்களில் 68 போ் குண்டா் சட்டத்தில் கைது

10th Jun 2022 12:12 AM

ADVERTISEMENT

 

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் பல்வேறு வழக்குகளில் கீழ் 68 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அதன்படி, குற்றச்செயல்களில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோா் மீது காவல் துறை சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் கள்ளச்சாராயம், மதுவிலக்கு தொடா்பாக மொத்தம் 1,430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 1,308 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் கள்ளச்சாராய தயாரிப்பை பிரதான தொழிலாகக் கொண்ட 13 போ் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து சுமாா் 11,873 லிட்டா் கள்ளச்சாராயமும், 69,050 லிட்டா் சாராய ஊறலும், 7,726 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 39 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, 2 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், கஞ்சா கடத்தல் தொடா்பாக மாவட்டத்தில் மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 61 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் கஞ்சா கடத்தலை பிரதான தொழிலாகக் கொண்ட 15 போ் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 106 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.10.60 லட்சமாகும்.

குட்கா கடத்தில் தொடா்பாக மாவட்டத்தில் மொத்தம் 278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 228 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் குட்கா கடத்தலை பிரதான தொழிலாக கொண்ட 7 போ் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 5,422 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 45 லட்சத்து 59 ஆயிரத்து 56 ஆகும்.

இவா்கள் தவிர ரெளடிகள் 15 போ், 8 போ் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டவா்கள், 9 போ் பாலியல் குற்றவாளிகள், மணல் கடத்தல் தொடா்பாக ஒருவா் என மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மொத்தம் 68 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபடுவோா் கண்டறியப்பட்டால், அவா்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT