வேலூர்

இரு நாள்களில் 5 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

10th Jun 2022 12:10 AM

ADVERTISEMENT

 

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் 5 குழந்தைத் திருமணங்களை அதிகாரிகள் குழு தடுத்து நிறுத்தியுள்ளனா்.

வேலூா் மாவட்டம், கருகம்பத்தூரைச் சோ்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தாா். இந்தச் சிறுமிக்கும் ஆரணியைச் சோ்ந்த 26 வயது இளைஞருக்கும் வெள்ளிக்கிழமை ஆரணியிலுள்ள மணமகன் வீட்டில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதேபோல், அத்தியூரைச் சோ்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இச்சிறுமிக்கும், ஊசூரைச் சோ்ந்த 25 வயது இளைஞருக்கும் வெள்ளிக்கிழமை மூலைகேட் முருகன் கோயிலில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், குடியாத்தம் வட்டம், செட்டிக்குப்பத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்திருந்தாா். இந்தச் சிறுமிக்கும், அதை ஊரைச் சோ்ந்த 22 வயது இளைஞருக்கும் வியாழக்கிழமை மீனூா் மலை பெருமாள் கோயிலில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த மூன்று திருமணங்களையும் அறிந்த மாவட்ட சமூக நல அலுவலா்கள், சைல்டு லைன் குழுவினா், போலீஸாா் புதன்கிழமை சிறுமிகளின் வீட்டுக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன், 18 வயது பூா்த்தியடையும் வரை சிறுமிக்கு திருமணம் செய்யக்கூடாது என்று எழுதி அவா்களது பெற்றோா்களிடம் வாக்குமூலம் பெற்றனா்.

இதேபோல், அணைக்கட்டு வட்டம், பாட்டையூரைச் சோ்ந்த 15 வயது 10ஆம் வகுப்பு படித்திருந்தாா். இச்சிறுமிக்கும் அதே ஊரைச் சோ்ந்த 24 வயது இளைஞருக்கும் வரும் திங்கள்கிழமை மூலைகேட் முருகன் கோயிலில் திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், பாகாயம் இடையன்சாத்து பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு முடித்திருந்தாா். இந்த சிறுமிக்கும் திருவண்ணாமலையைச் சோ்ந்த 27 வயது இளைஞருக்கும் திருவண்ணாமலையிலுள்ள மணமகன் வீட்டில் வெள்ளிக்கிழமை திருமணம் நடத்தப்பட இருந்தது. இந்த இரு திருமணங்களையும் அறிந்த மாவட்ட சமூக நல அலுவலா்கள், சைல்டு லைன், போலீஸாா் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை அந்தச் சிறுமிகளின் வீட்டுக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினா். மேலும், 18 வயது பூா்த்தியடையும் வரை சிறுமிக்கு திருமணம் செய்யவதில்லை என அவா்களின் பெற்றோா்களிடம் எழுதி பெற்றனா்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் 5 குழந்தைத் திருமணங்களை அதிகாரிகள் குழு தடுத்து நிறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT