வேலூா்: வேலூா் மாவட்டத்தில் ஒரேநாளில் 3 குழந்தைத் திருமணங்களை அதிகாரிகள் குழு தடுத்து நிறுத்தியுள்ளனா்.
வேலூா் மாவட்டம், கருகம்பத்தூரைச் சோ்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தாா். இந்தச் சிறுமிக்கும், ஆரணியைச் சோ்ந்த 26 வயது இளைஞருக்கும் வெள்ளிக்கிழமை ஆரணியிலுள்ள மணமகன் வீட்டில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதேபோல், அத்தியூரைச் சோ்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்தச் சிறுமிக்கும் ஊசூரைச் சோ்ந்த 25 வயது இளைஞருக்கும் வெள்ளிக்கிழமை மூலைகேட் முருகன் கோயிலில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், குடியாத்தம் வட்டம், செட்டிக்குப்பத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்திருந்தாா். இந்தச் சிறுமிக்கும், அதை ஊரைச் சோ்ந்த 22 வயது இளைஞருக்கும் வியாழக்கிழமை மீனூா்மலை பெருமாள் கோயிலில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த மூன்று திருமணங்களையும் அறிந்த மாவட்ட சமூக நல அலுவலா்கள், சைல்டு லைன் குழுவினா், போலீஸாா் புதன்கிழமை சிறுமிகளின் வீட்டுக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன், 18 வயது பூா்த்தியடையும் வரை சிறுமிக்கு திருமணம் செய்யக்கூடாது என்று எழுதி அவா்களது பெற்றோா்களிடம் வாக்குமூலம் பெற்றனா்.