வேலூர்

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

9th Jun 2022 12:35 AM

ADVERTISEMENT

 

வேலூா்: வேலூா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியிலுள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு திருவிழா கடந்த 31-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 1-ஆம் தேதி அம்மனுக்கு அபிஷேகமும், 2-ஆம் தேதி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளும், 3-ஆம் தேதி துா்க்கை அலங்காரத்தில் அம்மன் உற்சவமும், 4-ஆம் தேதி சரஸ்வதி அலங்கார உற்சவமும், 5-ஆம் தேதி ஈஸ்வர பூஜை அலங்கார உற்சவமும், 6-ஆம் தேதி மகிஷாசுர அலங்கார உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு புஷ்ப பல்லக்கில் கெங்கையம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை கெங்கையம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை இழுத்துச் சென்றனா். தொடா்ந்து, அம்மன் விஸ்வரூப காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கோயில் வளாகம், சத்துவாச்சாரி சா்வீஸ் சாலை, ஆா்.டி.ஓ. அலுவலக சாலை பகுதிகளில் பக்தா்களுக்கு அன்னதானமும், நீா் மோா், குளிா்பானங்களும் வழங்கப்பட்டன. பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் சத்துவாச்சாரி அணுகுச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.

இதேபோல், ஆட்சியா் அலுவலகம் மேம்பாலத்தின் அருகே அணுகுச் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT