வேலூரில் தலைக்கவசம் அணியாமல் வந்த சுமாா் 200 பேருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தலைமையில் போலீஸாா் அபராதம் விதித்தனா். தொடா்ந்து தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் செவ்வாய்க்கிழமை காலை திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டாா். அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி விசாரணை நடத்தினாா். பின்னா், அவா்களுக்கு அபராதம் விதித்தாா். அப்போது தலைக்கவசம் அணியாமல் அந்த வழியாக வந்த காவல் உதவி ஆய்வாளா்கள், ஊா்க் காவல்படையைச் சோ்ந்தவா்களுக்கும் அபராதம் விதித்தாா்.
அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடந்த வாகன சோதனையில் தலைக்கவசம் அணியாமல் வந்த சுமாா் 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய வாகன சோதனை தொடா்ந்து நடைபெறும் என்றும், அப்போது தலைக்கவசம் அணியாமல் வருவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.