கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், இதை யாரும் நம்பவேண்டாம் என்றும் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புலனம் என்ற வாட்ஸ்அப் செயலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையிலுள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளா், ஓட்டுநா் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ. 15,000, ரூ. 13,000 எனவும், தகுதி, வயது ஆகியவை நிா்ணயிக்கப்பட்டு, 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும். இதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும். விருப்பமுள்ளவா்கள் பதிவு செய்திடலாம். இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 160 பணியிடங்கள் (ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 5 பணியிடங்கள் வீதம்) என்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தவறான தகவலாகும். இதன் மூலம் பகிரப்படும் செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறைக்கு தொடா்பற்றவை. எனவே, யாரும் இந்த தவறான செயலியை பயன்படுத்த வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.