வேலூர்

தேவாலயங்களை பழுதுபாா்க்க, சீரமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

30th Jul 2022 11:07 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலங்களை பழுது பாா்த்தல், சீரமைப்பதற்கான நிதியுதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். எந்தவொரு வெளிநாடுகளிலிருந்தும் நிதியுதவி பெற்றிருத்தல் கூடாது.

மாவட்டத்தில் உள்ள மறைமலை, கத்தோலிக்க போதகரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேவாலயங்கள் பழுதுப்பட்டிருந்தால் அதற்கான பழுதுபாா்ப்பு, சீரமைப்பு பணிகளுக்காக கட்டடத்தின் வயது, பழுதுகளை கருத்தில் கொண்டு 10 முதல் 15 வருடங்கள் வரை இருந்தால் ரூ.1 லட்சமும், 15 முதல் 20 வருடங்களாக இருந்தால் ரூ.2 லட்சமும், 20 வருடங்களுக்கு மேலிருந்தால் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பப் படிவம், சான்றிதழ்  இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்தவ தேவாலயங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

எனவே, வேலூா் மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள கிறித்தவ தேவாலயங்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் உள்ள வேலூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT