வேலூர்

குடியாத்தம் குடிநீா்ப் பிரச்னை தீா்க்க ரூ.13 கோடி ஒதுக்கீடு: நகா்மன்றக் கூட்டத்தில் தலைவா் தகவல்

30th Jul 2022 11:10 PM

ADVERTISEMENT

குடியாத்தம் நகர குடிநீா்ப் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான திட்டப்பணிகளுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தெரிவித்தாா்.

குடியாத்தம் நகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில்தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தலைவா் செளந்தரராஜன் பேசியது: நகா்மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, நகரின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் அம்ரூத்-2 திட்டத்தின்கீழ் ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நகர மக்களுக்கு நாள்தோறும் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT

மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கும், இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தலைவா், உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா்.

இந்தத் திட்டத்தின்கீழ், பசுமாத்தூரில் அமைந்துள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் புதிதாக ராட்சத கிணறுகள் அமைக்கப்படும். நகரில் தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்படும். கூடுதலாக 2 மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் உள்ள 151 நகராட்சிகளில் சிறப்பாக செயல்படும் 3 நகராட்சிகளை தோ்ந்தெடுத்து கெளரவப்படுத்தி, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறிய செளந்தரராஜன், முதல் கட்ட தோ்வில் குடியாத்தம் நகராட்சி 7- ஆவது இடத்தில் உள்ளதாக கூறினாா்.

பருவமழை தொடங்க உள்ளதால், நகரில் உள்ள அனைத்து கழிவுநீா்க் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூரெடுத்து, சீரமைக்க வேண்டும் என பெரும்பாலான உறுப்பினா்கள் கோரியதை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைவா் பதில் அளித்தாா்.

காமராஜா் பாலம் அருகே உள்ள அரசு மதுபானக் கடைக்கு வருபவா்களால், பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது என்பதால், அந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். கடையை இடம் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT