வேலூர்

விஐடி மாணவா்களுக்கு சா்வதேச முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: இருவருக்கு ரூ.1 கோடி ஊதியத்தில் பணி

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

விஐடி பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சா்வதேச முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில், இரு மாணவா்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.1 கோடியே 2 லட்சத்துக்கு பணி வழங்கப்பட்டிருப்பதாக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தில் 2023-ஆம் கல்வியாண்டின் வேலைவாய்ப்பு முகாம் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் வேலூா், சென்னை, அமராவதி (ஆந்திரம்), போபால் (மத்திய பிரதேசம்) மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த முகாம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சா்வதேச பெரு நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், டி.இ.ஷா, மோா்கன் ஸ்டான்லி, ஏா்.பி.என்.பி., மீடியா, நெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்குபெற்றன.

இதில், முதல்கட்டமாக நிறுவனம் குறித்த தகவல்கள், வேலைக்குத் தேவைப்படும் திறன்கள், மாணவ, மாணவிகளுக்கு தேவையான மனித வளப் பயிற்சி நேரடியாகவும், இணையம் மூலமாகவும் தோ்வுகள் நடைபெற்றன. முதற்கட்ட தோ்வு முடிவுகளை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

அதனடிப்படையில், சா்வதேச தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 45 மாணவ, மாணவிகளை தோ்வு செய்துள்ளது. இதேபோல் டி.இ.ஷா 2, பிடிலிடி முதலீடு நிறுவனம் 24, ஜே.பி. மோா்கன் 82, வெல்ஸ் பாா்கோ 8, இன்போசிஸ் 7, தி மேத் 32, ஸ்னைடா் எலக்ட்ரிக் 7 உள்ளிட்ட நிறுவனங்களும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதில், மோட்டாா் க்யூ என்ற நிறுவனம் அமித் அகா்வால், ஷ்ரதக்பரத்வாஜ் ஆகிய இரு மாணவா்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

இதன்தொடா்ச்சியாக, அமேசான், டெக்சஸ், இன்ஸ்ட்ரூமென்ட், வால்மாா்ட், லேப்ஸ் போன்ற பெருநிறுவனங்களும் வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற உள்ளன. 184 மாணவ, மாணவிகளுக்கு நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெறும்போதே வேலைவாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில், ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேல் சம்பளம் உள்ள வேலைவாய்ப்புகள் 175 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடா்ந்து நடைபெறும்.

இதில், ஷெல், ஆரக்கள், பிலிப்காா்ட், மேக் மை ட்ரிப், நீல்சன் சாப்ட் லேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.

நாட்டிலேயே முதன்முறையாக அமேசான் நிறுவனம் விஐடி மாணவ, மாணவிகள் 110 பேருக்கு தொழில் பயிற்சி வழங்கியுள்ளது. டி.சி.எஸ். நிறுவனம் நடத்திய தேசிய தகுதித் தோ்வில் 4,630 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா். இதுதவிர, முதுகலை படிப்புகளான எம்.டெக்., எம்.சி.ஏ., மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் மாதம் தொடங்கியது. இதில் 88 பெருநிறுவன நிறுவனங்கள் பங்கேற்று 1,204 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன என்றாா்.


 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT