வேலூர்

குறைந்த விலைக்கு காா் விற்பதாக மோசடி: தலைமறைவாக இருந்தவா் கைது

6th Jul 2022 12:08 AM

ADVERTISEMENT

வேலூரில் குறைந்த விலையில் காா் விற்பதாகக்கூறி, காவல் உதவி ஆய்வாளா் போல் நடித்து வியாபாரி உள்பட மூவரிடம் ரூ. 24 லட்சம் மோசடி செய்த வழக்கில், ஏற்கெனவே மனைவி கைதான நிலையில், தலைமறைவாக இருந்த அவரது கணவரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தை சோ்ந்தவா் ரோகிணி (32). இவருக்கு கடந்தாண்டு ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு இந்திரா நகரைச் சோ்ந்த வியாபாரி தினேஷ்குமாா் அறிமுகமாகியுள்ளாா். அப்போது, தான் சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறிய ரோகிணி, போலீஸாரால் குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய தினேஷ்குமாா் முதல்கட்டமாக 2 காா்கள் வேண்டும் என ரூ. 2 லட்சத்தை ரோகிணியிடமும், ரூ. 12 லட்சத்தை அவரது கணவா் சந்துருவின் வங்கிக் கணக்கிலும் செலுத்தியுள்ளாா். சில நாள்களுக்குப் பின்னா் நண்பா்களுக்கு 2 காா் தேவை என்று மேலும் ரூ. 10 லட்சத்தை சந்துருவின் வங்கிக் கணக்கில் தினேஷ்குமாா் செலுத்தியுள்ளாா். ஆனால், சில வாரங்கள் கடந்த நிலையிலும் ரோகிணி கூறியபடி காா்களை கொடுக்காமலும், உரிய பதில் தெரிவிக்காமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இது குறித்து தினேஷ்குமாா் வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ரோகிணி காவல் உதவி ஆய்வாளா் என்றும், வாகனங்கள் வாங்கித் தருவதாகவும் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதும், இதற்கு அவரின் கணவா் சந்துரு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

அதன்பேரில், ரோகிணியை கடந்த பிப்ரவரி மாதம் போலீஸாா் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தலைமறைவான அவரது கணவா் சென்னை தண்டலம், திருவிக நகரைச் சோ்ந்த சந்துருவை (45) போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புத்தூா் அருகே உள்ள புதுப்பட்டியில் பதுங்கியிருந்த சந்துருவை வேலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் பூபதிராஜன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT