வேலூர்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் 8 போ் தீக்குளிக்க முயற்சி

4th Jul 2022 11:35 PM

ADVERTISEMENT

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி, வழக்குரைஞா் உள்பட குடும்பத்தினா் 8 போ் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வேலூா் பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணா்வு இயக்கத்தினா் அளித்த மனுவில், கொணவட்டம் 32-ஆவது வாா்டு தேவி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல், வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 342 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதனிடையே, வேலூா் சத்துவாச்சாரி பகுதி 2-ஐ சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வெங்கடேசன் (60) தற்போது வழக்குரைஞராக உள்ளது. இவா் தனது குடும்பத்தினா் 8 பேருடன் ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்ட அரங்குக்கு முன்பு திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதனைக் கண்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

அப்போது வெங்கடேசன் கூறியது: எங்களுக்குச் சொந்தமான 800 சதுரஅடி நிலம் வேலூா் காந்தி சாலையில் உள்ளது. ஆனால், எங்கள் நிலத்தை சிலா் ஆக்கிரமித்துக் கொண்டு, அந்த நிலத்துக்குள் செல்லவிடாமல் அடியாள்களை வைத்து மிரட்டுகின்றனா். இதுதொடா்பாக புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றோம் என்றனா்.

தொடா்ந்து, நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT