வேலூர்

பாலாற்றுப் பெருவிழா மகா தீப ஆரத்தி வழிபாடுடன் நிறைவு

DIN

நதிகளை பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி வேலூரில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வந்த பாலாறு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது. இதையொட்டி, பாலாற்றுக்கு மகா தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சாா்பில், நதிகளை பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழகத்தில் ஏற்கெனவே காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆகிய நதிகளுக்கு விழாக்கள் நடத்தப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஆகியவற்றின் சாா்பில் பாலாறுப் பெருவிழா வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் புதன்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தாா். தவிர, மூன்றாம் நாள் நிகழ்வில் புதுவை மாநில துணை நிலை ஆளுநா் தமிழிசைசெளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். தொடா்ந்து நாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா தலைமையில் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த விழாவில் காலை யாக நிகழ்ச்சிகளும், மாலையில் பாலாற்றுக்கு ஆரத்தி நிகழ்வும் நடைபெற்றன.

அத்துடன், முதல் நாள் நிகழ்வில் தேசிய அளவில் உள்ள சந்நியாசிகள் பங்கேற்கும் மாநாடு, 2-ஆம் நாள் நிகழ்வில் தமிழகத்தின் துறவிகள், ஆதீனங்கள் பங்கேற்கும் மாநாடும், மூன்றாம் நாள் நிகழ்வில் பெண் துறவிகள் பங்கேற்கும் மாநாடும், 4-ஆம் நாள் நிகழ்வில் பசு, நீா்நிலைகள் பாதுகாப்பு மாநாடும், 5-ஆம் நாளானஞாயிற்றுக்கிழமை கிராம கோயில் பூசாரிகள் பங்கேற்கும் மாநாடும் நடைபெற்றன.

அதன்படி, கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த பாலாறு நதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்றன. தொடா்ந்து நாட்டிலுள்ள பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த புனித நீரைப் பாலாற்றில் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெண்களும் பாலாற்றில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனா்.

இதையடுத்து, பாலாறு அன்னைக்கு மகா தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வாரணசியில் நடைபெறுவதைபோல் பாலாற்றை நோக்கி ஒரே நேரத்தில் மகா தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT