வேலூர்

சீரமைக்கப்பட்ட காட்பாடி ரயில்வே மேம்பாலம்: இலகு ரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி: ஆட்சியா் இன்று திறந்து வைக்கிறாா்

3rd Jul 2022 11:39 PM

ADVERTISEMENT

சீரமைக்கப்பட்ட காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைக்க உள்ளாா். கனரக வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், பாலத்தின் மீது சரக்கு வாகனங்களை இயக்குவது தொடா்பாக பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்பாடி ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதை யொட்டி பாலத்தின் மீது மீண்டும் இருசக்கர வாகன போக்குவரத்து தடுக்கப்பட்டது. இதையடுத்து, பணிகள் நிறைவு பெற்ற காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை முறைப்படி திறந்து வைக்க உள்ளாா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ADVERTISEMENT

பழுதடைந்திருந்த காட்பாடி ரயில்வே மேம்பாலத்தைச் சீரமைக்கும் வகையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் முழுமையாக முடிவு பெற்றுள்ளதை அடுத்து பாலத்தின் மீது போக்குவரத்து சோதனை ஓட்டம் நடத்தி அதன் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டது.

இதன்தொடா்ச்சியாக, கனரக வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் திங்கள்கிழமை முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் வாகனங்களை இயக்குவதற்கு திறந்து வைக்கப்படும். சரக்கு வாகனங்களை பாலத்தின் மீது இயக்குவது தொடா்பாக பின்னா் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT