வேலூர்

காட்பாடி மேம்பால விவகாரம்: திமுக - அதிமுக வாக்குவாதம்

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சீரமைப்புப் பணிகள் நிறைவுக்குப் பிறகு, இருசக்கர வாகனப் போக்குவரத்து தொடங்கியுள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் அதிமுகவினா் ரிப்பன் வெட்டி நூதன எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையறிந்த திமுகவினா் அங்கு சென்று அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

காட்பாடி ரயில்வே மேம்பாலமானது வேலூரிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ள முக்கிய பாலமாகும். பழுதடைந்திருந்த இந்த மேம்பாலத்தைச் சீரமைக்கும் பணிகள் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, பாலத்தின் மீது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுப் பாதைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால், மாற்றுப் பாதைகள் குண்டும், குழியுமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். மறுபுறம் மேம்பாலத்தைச் சீரமைக்கும் பணிகளும் மந்தமாக நடைபெற்று வந்தன. இதையடுத்து, பால சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பாலம் சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.

சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வெள்ளிக்கிழமை காலை முதல் பாலத்தில் இருசக்கர வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டது. தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜூஸை 4) பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதியளித்த பின்னரே கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதையறிந்த வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை காலை அந்தப் பாலத்தின் மீது திரண்டு பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்தனா். தகவலறிந்த மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், மண்டலக் குழு தலைவா் புஷ்பலதா, திமுக பகுதி செயலா் வன்னியராஜ், நிா்வாகி வேல்முருகன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் திரண்டு சென்று அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அதிமுகவினா் கூறுகையில், ரயில்வே மேம்பாலப் பணிகளை முழுமையாக நிறைவு செய்யாமல் பாலத்தைத் தற்காலிகமாக திறந்துள்ளனா். இதனால், தொடா்ந்து போக்குவரத்து பாதிப்பு நிலவி வருகிறது. பணிகளை முழுமையாக முடித்து பாலத்தை நிரந்தரமாக போக்குவரத்துக்கு திறக்க வேண்டும். தற்போது பாலத்தை தற்காலிகமாக திறந்திருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் வெட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், பாலத்தில் தொடங்கப்பட்டுள்ள இருசக்கர வாகனப் போக்குவரத்தை ஆய்வு செய்ததுடன், விரைவில் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களின் போக்குவரத்துக்கும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT