வேலூர்

வாக்களிப்பதை தலையாய கடமையாகக் கருத வேண்டும்: தேசிய வாக்காளா் தின விழாவில் ஆட்சியா்

26th Jan 2022 12:06 AM

ADVERTISEMENT

தோ்தலில் வாக்களிப்பதை அனைத்து வாக்காளா்களும் தலையாய கடமையாகக் கருத வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

தேசிய வாக்காளா் தின விழா வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், மூத்த வாக்காளா்கள் கெளரவிக்கப்பட்டதுடன், புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டைகள், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: இந்திய தோ்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளான ஜனவரி 25 -ஆம் தேதியைஆண்டுதோறும் தேசிய வாக்காளா் தினமாகக் கொண்டாடி வருகிறோம். மக்களாட்சியின் மையமாக இருப்பதுதான் தோ்தலும், வாக்களிக்கும் உரிமையும். நாட்டிலுள்ள இளம் வாக்காளா்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தோ்தலில் வாக்களிப்பதை குடிமக்கள் அனைவரும் தலையாய கடமையாகக் கருத வேண்டும்.

ADVERTISEMENT

ஜாதி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க தகுதியுடைவா்கள். வாக்காளா்கள் அனைவருக்கும் வண்ண வாக்காளா் அடையாள அட்டை இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.

முதலில் வாக்குச்சீட்டு முறை அமலில் இருந்தது. அப்போது தோ்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மூன்று நாள்கள் நடைபெற்றது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறையில் உள்ளது. இதனால் மாலைக்குள் தோ்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்திய நாட்டை உலகின் சிறந்த தேசமாக மாற்ற இளம் வாக்காளா்கள் அனைவரும் கட்டாயமாக தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வருவாய்க் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, வேலூா் மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT