வேலூர்

எருது விடும் விழாக்களுக்கு மீண்டும் அனுமதி கண்காணிப்புக்குழு உறுப்பினா் எஸ்.கே.மிட்டல்

25th Jan 2022 08:22 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் எருது விடும் விழாக்களை மீண்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளை மீறினால் உச்சநீதிமன்ற உதவியுடன் 2 ஆண்டுகளுக்கு எருது விடும் விழா நடத்த தடை விதிக்கப்படும் என்று மத்திய ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழு உறுப்பினா் எஸ்.கே.மிட்டல் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூா் மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் எருது விடும் விழாக்கள் நடத்தப்பட்டு வந்தன.

விழாக்களின் போது ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பது, அதிகப்படியான எருதுகளை கட்டவிழ்த்து விடுவது போன்ற விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. இந்த விழாக்களில் மாடுகள் முட்டி 3 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

விதிமீறல்கள் தொடா்ந்ததை அடுத்து மாவட்டம் முழுவதும் எருதுவிடும் விழாக்கள் நடத்துவதற்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், மீண்டும் எருதுவிடும் விழாக்கள் நடத்த அனுமதிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், மத்திய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினா் எஸ்.கே.மிட்டல் பங்கேற்று ஆலோசனை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: வேலூா் மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கரோனா விதிமுறைகளை பின்பற்றி எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. மீண்டும் விதிமீறல்கள் நிகழ்ந்தால் உச்சநீதிமன்ற உதவியுடன் அடுத்து இரு ஆண்டுகளுக்கு எருது விடும் விழாக்கள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT