வேலூர்

3 மாத ஊதிய நிலுவை அளிப்பு: பயிற்சி மருத்துவா்கள் போராட்டம் வாபஸ்

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

மூன்று மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த ஊதியம் வழங்கப்பட்டதையடுத்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் திரும்பப் பெறப்பட்டது.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் 4 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவப் பட்டப்படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்த மாணவா்கள் 104 போ் பயிற்சி மருத்துவா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 3 மாதங்களாகப் பயிற்சி ஊதியம் வழங்கப்படாததுடன், கரோனா ஊக்கத் தொகை, ஜூலை மாத சம்பள நிலுவை 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஊதிய நிலுவைகளை வழங்க வலியுறுத்தி பயிற்சி மருத்துவா்கள் கடந்த மூன்று மாதங்களாக கோரி வந்தபோதிலும் வழங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவா்கள் திங்கள்கிழமை காலை முதல் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பயிற்சி மருத்துவா்களை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் சந்தித்து பேசினாா்.

ADVERTISEMENT

அப்போது செவ்வாய்க்கிழமை மாலைக்குள் 3 மாத நிலுவை ஊதியம் வழங்கப்படும். உடனடியாக போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். ஆனால், சம்பளத் தொகை முழுமையாக தங்களது வங்கிக் கணக்குகளுக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என பயிற்சி மருத்துவா்கள் கூறி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, பயிற்சி மருத்துவா்களின் வங்கிக்கணக்கில் அவா்களின் மூன்று மாத கால நிலுவை ஊதியம் பிற்பகலில் செலுத்தப்பட்டது. அதனை ஏற்று அனைவரும் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு பணிக்குத் திரும்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT