ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலை பணிகளுக்கான எழுத்துத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வை வேலூா் மையங்களில் 2,048 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முழு ஊரடங்கு காரணமாக இந்த தோ்வு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை முதல் தாள் தோ்வும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 2-ஆம் தாள் தோ்வும் நடத்தப்பட்டன. தோ்வையொட்டி, வேலூரில் கொசப்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, காட்பாடி சன்பீம் சிபிஎஸ்இ பள்ளி, காந்தி நகா் டான்போஸ்கோ பள்ளி, கொணவட்டம் கூனா பிரசிடென்சி மெட்ரிக். பள்ளி, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக். பள்ளி, சாந்திநிகேதன் மெட்ரிக். பள்ளி என 8 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த மையங்களில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த 2,048 போ் தோ்வு எழுதினா்.