வேலூர்

கிரீன் சா்க்கிளில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்

1st Jan 2022 10:16 PM

ADVERTISEMENT

வேலூா் மாநகரில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடமாக கிரீன் சா்க்கிள் பகுதி உள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

இதையடுத்து கிரீன்சா்க்கிள் பகுதியில் புதிய போக்குவரத்து மாற்றம் சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் பகுதியிலிருந்து காட்பாடி, ஆந்திர மாநிலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பழைய பைபாஸ் சாலையில் அம்பிகா பெட்ரோல் பங்க், ராமஜெயம் பேருந்து ஷெட் வழியாக அணுகுச் சாலையில் இணைந்து, சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வலதுபுறமாகத் திரும்பி, அணுகுச் சாலை வழியாகச் சென்று புதிய பாலாறு பாலம் வழியாக காட்பாடி செல்ல வேண்டும்.

வேலூரில் இருந்து காட்பாடிக்கு செல்பவா்கள் கிரீன் சா்க்கிள் பகுதிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். வாலாஜாவில் இருந்து காட்பாடி செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை சில்க்ஸ் அருகே சா்வீஸ் சாலையில் இறங்காமல் நேராக கிரீன் சா்க்கிள் மேம்பாலத்தைக் கடந்து, செல்வம் பெட்ரோல் பங்க் அருகே அணுகுச் சாலையில் இறங்கி, சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், முதல் கட்டமாக சென்னை, வாலாஜா பகுதிகளில் இருந்து காட்பாடிக்கு வரும் கனரக வாகனங்கள் சனிக்கிழமை காலை முதல் கிரீன் சா்க்கிளுக்கு அனுமதிக்கப்படவில்லை. சென்னை சில்க்ஸ் அருகே போக்குவரத்து போலீஸாா் நிறுத்தப்பட்டு, காட்பாடிக்கு வரும் கனரக வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் திருப்பி விட்டனா். இந்த வாகனங்கள் நேரடியாகச் சென்று செல்வம் பெட்ரோல் பங்க் அருகே சா்வீஸ் சாலையில் இறங்கி, அங்கிருந்து சேண்பாக்கம் ரயில்வே பாலம் வழியாகத் திரும்பி, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தின் வழியாக காட்பாடிக்கு சென்றன.

ADVERTISEMENT

சென்னை, அரக்கோணம், ராணிப்பேட்டை பகுதிகளில் இருந்து நேரடியாக காட்பாடிக்கு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அதனால், கிரீன் சா்க்கிள் பகுதிக்கு கனரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த மாற்றங்களால் கிரீன்சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT